வீழிச் செடிகள் (அதாவது செண்பகம், பலா, விளா மரங்கள் அடங்கியது) நிறைந்திருந்ததால் 'திருவீழிமிழலை' என்ற பெயர் பெற்றது.
மூலவர் 'வீழிநாத சுவாமி' என்று அழைக்கப்படுகிறார். 'நேத்ரார்ப்பணேஸ்வரர்' என்றும் கூறுவர். அழகிய லிங்க வடிவில், சதுர வடிவ ஆவுடையுடன் கிழக்கு திசை நோக்கி அருள்புரிகின்றார். சற்று உயர்ந்த பாணம். கருவறையில் மூலவருக்கு பின்புறம் சிவபெருமான், பார்வதி அம்மன் திருவுருவங்கள் உள்ளன.
அம்பிகை 'சுந்தர குஜாம்பிகை' (அழகிய மாமுலையம்மை) எனும் திருநாமத்துடன், நான்கு கரங்கள் கொண்டு தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றாள். இத்தலத்தில் சுவாமி சன்னதியும், அம்பாள் சன்னதியும் கிழக்கு நோக்கி ஒரே திசையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
காத்தியாயன முனிவரும், அவரது மனைவியும் தங்களுக்கு குழந்தை வரம் வேண்டி தவம் செய்து பார்வதி தேவியை மகளாகப் பெற்று 'காத்தியாயினி' என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். அவருக்கு திருமண வயது வந்ததும், முனிவரது வேண்டுகோளை ஏற்று சிவபெருமான், காத்தியாயினியை திருமணம் செய்து கொண்டு, மாப்பிள்ளை சுவாமியாக அருள்பாலிக்கிறார். மூலவர் சன்னதிக்கு அருகிலேயே சுமார் 3 அடி உயர அழகிய உற்சவ திருமேனி. திருமணம் தடைபடுவோர் இத்தலத்திற்கு வந்து சுவாமியையும், அம்பாளையும் வழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.
உள்பிரகாரத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமான், சிவகாம சுந்தரி உடனுறை நடராஜர், பைரவர், கஜலட்சுமி, சனி பகவான், சூரியன், சந்திரன் ஆகிய சன்னதிகள் உள்ளன.
ஒரு சமயம் மகாவிஷ்ணு சலந்தரன் என்னும் அரக்கனுடன் போர் புரிந்த அவரது சக்ராயுதத்தை அரக்கன் எடுத்துச் சென்று விட்டான். மகாவிஷ்ணு சிவபெருமானிடம் சென்று வேண்ட, அவரும் தான் பூலோகத்தில் வீழிச்செடிகள் நிறைந்த காட்டில் இருப்பதாகவும், அங்கு வந்து வழிபட்டால் சக்ராயுதம் கிடைக்கும் என்றும் அருளினார். மகாவிஷ்ணுவும் இத்தலத்திற்கு வந்து தீர்த்தம் ஒன்றை உருவாக்கி, நாள்தோறும் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து, ஆயிரம் தாமரை மலர்களால் அர்ச்சித்து வந்தார்.
ஒருநாள் சிவபெருமானின் திருவிளையாடலால் ஒரு தாமரை மலர் மறைந்துவிட, மகாவிஷ்ணு தமது கண்ணையே ஆயிரமாவது மலராக எடுத்து அர்ச்சனை செய்தார். உடனே சிவபெருமான் காட்சி தந்து, சலந்தரனை அழித்து, மகாவிஷ்ணுவின் சக்ராயுதத்தை அவரிடம் சேர்த்தார். உற்சவர் திருமேனியின் பாதத்தில் கண்மலர் இருப்பதை தற்போதும் காணலாம். திருமால் விண்ணிலிருந்து எடுத்து வந்த விண்ணிழி விமானமே தற்போது மூலவர் விமானம் என்று கூறுவர். சம்பந்தருக்கு சீர்காழியின் திருத்தோணி கோலத்தை இந்த விண்ணிழி விமானத்தில்தான் காட்டினார் இறைவன்.
சம்பந்தரும், அப்பரும் திருவீழிமிழலைக்கு வந்தபோது, அங்கு கடும் பஞ்சம் ஏற்பட்டிருந்தது. அடியார்களின் பசிப்பிணி போக்க இருவரும் சிவபெருமானைப் போற்றிப் பாடினர். 'வாசி தீரவே, காசு நல்குவீர்' என்னும் புகழ்பெற்ற தேவாரப் பதிகத்தை இத்தலத்தில்தான் ஞானசம்பந்தர் பாடினார். இறைவன் கருணையினால் கோயிலின் கொடிமரத்திற்கு அருகில் கிழக்கு பீடத்தில் இருந்த படிக்காசை சம்பந்தரும், மேற்கு பீடத்தில் இருந்த படிக்காசை அப்பரும் எடுத்து அடியார்களின் பசிப்பிணியைப் போக்கினர். இப்போதும் இந்த இரண்டு படிக்காசு பீடங்களும் உள்ளன. அதனால் இங்குள்ள விநாயகர் 'படிக்காசு விநாயகர்' என்று அழைக்கப்படுகிறார். கொடி மரம் அருகில் சண்டேஸ்வரருக்கு உபதேசம் செய்த நந்தி தேவர் உள்ளார். இவர் 'பாதாள நந்தி' என்று அழைக்கப்படுகிறார்.
இக்கோயிலில் உள்ள சிறந்த வேலைப்பாடுடன் கூடிய வௌவால் நந்தி மண்டபம் போன்று வேறெங்கும் கிடையாது. கோயிலின் வடக்கு வீதியில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் திருமடங்கள் உள்ளன. பல நாட்கள் இவர்கள் இருவரும் இம்மடங்களில் தங்கி இருந்து வழிபட்டனர். மேல வீதியில் வீழிச்சிவாக்கிர யோகிகள் சமாதிக் கோயில் உள்ளது.
மஹாவிஷ்ணு, பிரம்மதேவர், இந்திரன், அகத்தியர், வசிஷ்டர், காமதேனு, மனு, சிபிச் சக்கரவர்த்தி, புரூரவர் ஆகியோர் இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டுள்ளனர்.
அருணகிரிநாதர் இத்தலத்து முருகப்பெருமானை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.
பன்னிரு திருமுறைகளிலும் இடம்பெற்ற சிறப்புடைய தலம். திருஞானசம்பந்தர் 15 பதிகங்களும், திருநாவுக்கரசர் 8 பதிகங்களும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 7.30 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|